பாராளுமன்ற தேர்தலில் “தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்யுங்கள்” மு.க.ஸ்டாலின் பேச்சு
“வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்யுங்கள்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளத்தில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தாமல் உள்ளது. தற்போது தி.மு.க. சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபை கூட்டம் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியுடன் வெற்றி அடைந்துள்ளது. இது ஆளும் கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. தி.மு.க.வின் ஊராட்சி சபை கூட்டம் மூலம் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை முன்னெடுத்து செல்கிறோம்.
தி.மு.க.வினர் வெறும் டீ மட்டும் குடித்துக்கொண்டே கட்சி பணியாற்றியதால் 1967-ம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியை கைப்பற்றியதாக, அந்த தேர்தலில் தோல்வி அடைந்த பக்தவச்சலம் கூறினார். அதேபோன்று ஆர்வத்துடன் தற்போதும் வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்ற வேண்டும்.
தி.மு.க.வின் அடித்தளமாக வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 20 பேர் கொண்ட முகவர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தினமும் சென்று வாக்காளர்களை சந்தித்து, தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தது 20 வாக்காளர்களை தி.மு.க.வுக்கு வாக்களிக்க செய்தால், தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதில் தி.மு.க. வெற்றி பெறும்போது, அ.தி.மு.க.வின் ஆட்சி நீடிக்க வாய்ப்பே இல்லை. மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்தில் பினாமி ஆட்சியை நடத்தி வருகிறது.
பா.ஜனதா கடந்த தேர்தலில் அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. மாறாக உயர் பண மதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு போன்றவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வளவு நாட்கள் விவசாயிகளை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள் தற்போது தேர்தலை முன்னிட்டு ரூ.2 ஆயிரம் தருவதாக ஏமாற்றுகின்றனர்.
புதுடெல்லி வரையிலும் சென்று பல்வேறு போராட்டங்களை நடத்திய விவசாயிகளை பிரதமர் நரேந்திரமோடி சந்திக்கவே இல்லை. கஜா புயலால் பேரழிவை சந்தித்தபோது தமிழகத்துக்கு நேரில் வராத பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துகூட அறிக்கை வெளியிடவில்லை.
மக்களுக்கு துரோகம் விளைவிக்கின்ற மத்திய பா.ஜனதா அரசையும், அதன் பினாமியான அ.தி.மு.க.வையும் ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் ராமச்சந்திரன், நேரு, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விசுவநாதன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story