பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி செயல்படத் தொடங்கியது அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு


பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி செயல்படத் தொடங்கியது அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு
x
தினத்தந்தி 27 Feb 2019 3:45 AM IST (Updated: 27 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி செயல்படத் தொடங்கியது. இதையொட்டி அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி அருகில், திருச்செந்தூர் ரோட்டில் மருத்துவக்கல்லூரி மைதானத்தில் ரூ.150 கோடி செலவில் 7 அடுக்கு மாடியுடன் கூடிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி மதுரைக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்தவாறே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரி கட்டிடத்துக்குள் சிகிச்சைக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நேற்று முதல் முறைப்படி செயல்படத் தொடங்கியது. அங்கு இதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல் மற்றும் குடலியல் ஆகிய 4 துறைகளில் சிறப்பு சிகிச்சைக்கு புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி நேற்று தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது டீன் கண்ணன், துணை முதல்வர் ரேவதி பாலன், டாக்டர்கள் ராமசுப்பிரமணியன், எட்வின் மற்றும் துறை தலைவர்கள், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து டீன் கண்ணன் கூறுகையில், “முதல் கட்டமாக 4 துறைகளில் புறநோயாளிகள் பிரிவு மட்டும் இங்கு தொடங்கப்பட்டு உள்ளது. தினமும் 500 நோயாளிகள் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. படிப்படியாக இந்த ஆஸ்பத்திரி முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்” என்றார்.

மேலும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம் வழியாக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு நேற்று முதல் 4 பஸ்கள் சுழற்சி முறையில் தொடர்ந்து இயக்கப்படுகிறது. ஆனால் ஆஸ்பத்திரி முன்பு பஸ்களை நிறுத்தி, பயணிகளை அழைத்து செல்ல இடவசதி இல்லை. மதுரையில் அமைக்கப்படும் “எய்ம்ஸ்” ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியாக பஸ் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே போல் ஐகிரவுண்டு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வளாகத்தில் அல்லது அதையொட்டி பஸ்களை நிறுத்தி நோயாளிகள், உறவினர்களை ஏற்றி, இறக்கி செல்ல பஸ் நிலையம் அமைக்க இட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் பொது மேலாளர் துரைராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து சமாதானபுரம் வழியாக கே.டி.சி. நகருக்கு செல்லும் டவுன் பஸ்கள் மற்றும் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் பஸ்களில் நோயாளிகள் சட்டக்கல்லூரி பஸ் நிறுத்த பகுதியில் இறங்கி மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு எளிதாக சென்று வருவதற்கும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று நோயாளிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

Next Story