நெல்லை அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டம் 19 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
நெல்லை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, கொலை தொடர்பாக 19 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் உசையகுமார். இவர் முக்கூடலில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ராஜா (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாவது ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை ராஜா கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முன்னீர்பள்ளம் சிவன் கோவில் அருகே வந்தபோது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ராஜாவை வழிமறித்தனர். இதைக்கண்ட அவர் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு, கால்வாய் கரை வழியாக ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டிச்சென்று வெட்டி சாய்த்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதை அறிந்த ராஜாவின் உறவினர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். மேலும் அவருடைய உடலை சுற்றி அமர்ந்து கொலையாளிகளை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயற்சி செய்தனர்.
ஆனால் அதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்தையும் சிறைபிடித்தனர். மேலும் பொது மக்கள் முன்னீர்பள்ளத்தில் நெல்லை -அம்பை மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அவருடைய உடல் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னீர்பள்ளம் பகுதியில் நேற்று 2-வது நாளாகவும் பதற்றம் நீடித்தது. ராஜாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், அந்த கிராமத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். இதை அறிந்த வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் கிராமத்துக்குள் வருவதற்கு ராஜாவின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மெல்ல, மெல்ல சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் ஒருதலைபட்சமாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மருதம்நகரில் தங்களுக்கு தனியாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்று அறிவித்தனர். அதிகாரிகள் சமாதானப்படுத்திய போதும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது உள்ளிருப்பு போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரும் நேரில் சென்று ஆதரவு அளித்தனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.
இதற்கிடையே, பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ராஜாவின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறை பகுதியில் உறவினர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி ஐகிரவுண்டு பகுதியிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில் கொலைக் கான காரணம் குறித்து தகவல் தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லும் போது பூக்களை தெருக்களில் வீசி சென்று உள்ளனர். அப்போது மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர் வீட்டில் பூக்கள் விழுந்துள்ளது. இது தொடர்பாக 2 தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை இருதரப்பு பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இந்த பிரச்சினையில் ராஜா குறிவைத்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கொலையாளிகள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். தொடர்ந்து கொலையாளிகள் என சந்தேகப்படும் 2 நபர்கள் உள்பட 19 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் கொலை கும்பல் குறித்தும், அவர்கள் பதுங்கி இருக்கும் பகுதி குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி முன்னீர்பள்ளம் பகுதியில் நேற்று 2-வது நாளாகவும் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story