பாளையங்கோட்டையில் 1-ந்தேதி கூடங்குளத்தில் அணுஉலை பூங்கா அமைப்பதை எதிர்த்து பொதுக்கூட்டம் உதயகுமார் பேட்டி
கூடங்குளத்தில் அணுஉலை பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் வருகிற 1-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கூறினார்.
நெல்லை,
கூடங்குளத்தில் அணுஉலை பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் வருகிற 1-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கூறினார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளத்தில் 1, 2-வது அணுஉலைகள் இயங்குகிறதா என்று தெரியாத நிலையில் 3, 4, 5, 6 என அணுஉலைகளை அமைத்து அணுஉலைப்பூங்கா அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த அபாயகரமான அணுஉலை பூங்கா திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தூத்துக்குடி மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட கொள்கை தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவளம் மணக்குடி சரக்கு பெட்டக துறைமுக திட்டதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1-ந்தேதி மாலை 5-30 மணிக்கு பாளையங்கோட்டை சித்தா கல்லூரி முன்பு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் அனைத்து கட்சிகளையும் இணைத்து பொதுக்கூட்டம் நடத்துகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் நல்லக்கண்ணு, தொல்.திருமாவளன், நெல்லை முபாரக் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இந்த பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்றால் கன்னியாகுமரிக்கு வருகின்ற பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவோம்.
மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். எனவே மக்கள் அந்த ஆலையை திறக்கவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு தான் தமிழக அரசு சட்டசபை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறோம். தமிழக அரசு டெல்லி அரசுக்கு ஆட்சி நடத்துகிறது. டெல்லி அரசு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆட்சி நடத்துகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். கவர்னர் விடுதலை செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது. கவர்னரை விமர்சனம் செய்பவர்கள் மீது வழக்கு போடுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த முகிலன் காணாமல் போய் 11 நாட்கள் ஆகிவிட்டன. அவரை கண்டுபிடிக்க அரசும், போலீசாரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதை வரவேற்கிறோம். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனிப்பட்ட மனிதன் காணாமல் போனதற்கு அரசு பொறுப்பு ஏற்க முடியாது என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறுவது கண்டிக்கத்தக்கது. முகிலன் தனிப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்திய சமூக போராளி. அவரை கண்டுபிடிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராம மக்கள், சுப.உதயகுமார், வக்கீல் ரமேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல்மைதீன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல்ஜப்பார், செய்தி தொடர்பாளர் ஜமால், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் கனி, மை.பா.ஜேசுராஜ் ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், காணாமல் போன அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த முகிலனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story