ஊராட்சி செயலாளர் தற்கொலை, பாணாவரத்தில் மீண்டும் சாலை மறியல்
பாணாவரம் அருகே ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஒன்றிய மேலாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனப்பாக்கம்,
பாணாவரத்தை அடுத்த பழையபாளையம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 35). ஊராட்சி செயலாளராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை ஜெயபாலன், விவசாய நிலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீசார் விரைந்து சென்று ஜெயபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், ஜெயபாலன் 21-ந் தேதியிட்டு தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று அவருடைய வீட்டில் சிக்கியது. அதில் தனது சாவுக்கு காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக பணிபுரியும் ரேணுகோபால் தான் காரணம் என்று எழுதியிருந்தார்.
மேலும் ஜெயபாலனின் உறவினர்கள் அவருடைய உடலை வாங்க மறுத்து சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று ரேணுகோபாலை கைது செய்யக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு ஜெயபாலனின் உறவினர்கள், பொதுமக்கள் பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் ஏன், இன்னும் ரேணுகோபாலை கைது செய்யவில்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் சரியான பதில் சொல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரெயில்வே மேம்பாலத்துக்கு சென்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் போலீசாரிடம், ரேணுகோபாலை கைது செய்யும் வரை ஜெயபாலனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக பாணாவரத்தில் நடைபெற்ற ரெயில் நிலைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கோ.அரி எம்.பி, சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் ஜெயபாலனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ரேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்.
உறவினர்கள், ஜெயபாலனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறியதால் நேற்று பிரேத பரிசோதனை செய்யவில்லை. இன்று (புதன்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் கூறினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் ஒன்றிய மேலாளர் ரேணுகோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பாணாவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story