வடலூரில், நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


வடலூரில், நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2019 4:00 AM IST (Updated: 27 Feb 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

வடலூரில் நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வடலூர், 

வடலூர் ராகவேந்திரா சிட்டியில் வசிப்பவர் அன்பழகன் (வயது 60). இவரது மனைவி விஜயா(50). சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டு முடித்ததும் வீட்டை பூட்டி விட்டு தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அன்பழகன் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்த மர்மநபர் ஒருவர், தூங்கிக்கொண்டிருந்த விஜயாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். இதில் திடுக்கிட்டு எழுந்த விஜயா திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே அந்த நபர் விஜயாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினார்.

இதற்கிடையே விஜயாவின் சத்தம் கேட்டு வந்த அன்பழகன் மற்றும் உறவினர்கள் மர்மநபரை விரட்டி சென்றனர். இருப்பினும் அவர்களால் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை பிடிக்க முடியவில்லை. பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story