மராட்டிய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் : சலுகைகள் அறிவிக்கப்படுமா?
மராட்டிய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியாகுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை,
மராட்டிய அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினர். அப்போது அவர் மாநில அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். எதிர்க்கட்சிகள் கவர்னர் உரையை புறக்கணித்தன.
அன்றைய தினம் ரூ.4 ஆயிரத்து 284 கோடிக்கு துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மராட்டிய சட்டசபையின் ஆயுள் காலம் நிறைவு பெற உள்ள நிலையில், வருகிற அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு 2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்ய உள்ளது.
இடைக்கால பட்ஜெட்டை நிதிமந்திரி சுதீர் முங்கண்டிவார் காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார்.
வழக்கமாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவில் கொள்கை முடிவுகள், நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதில்லை.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, இந்த ஆண்டு இறுதியில் மராட்டிய சட்டமன்றத்துக்கும் தேர்தல் வருவதால், மத்திய பட்ஜெட் பாணியில், மராட்டிய இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகை அறிவிப்புகள், மக்களை கவரும் அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மராட்டிய பட்ஜெட்டில் 5 ஏக்கருக்கு அதிகமாக உள்ள விவசாயிகளுக்கும் நிதி வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story