பெங்களூருவில் இருந்து சூரத்திற்கு சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போனில் மிரட்டல் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது


பெங்களூருவில் இருந்து சூரத்திற்கு சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போனில் மிரட்டல் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2019 4:00 AM IST (Updated: 27 Feb 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து சூரத்திற்கு சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி போனில் மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

சூரத்தை சேர்ந்தவர் பிரதீக் ரத்தோர் மகேஷ் பாய்(வயது 49). இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். இவர் தனது மனைவி, மகனுடன் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் வந்தார். திருமண விழா முடிந்ததும் அவர் சூரத்திற்கு விமானம் மூலம் செல்ல முடிவு செய்தார். அதற்காக பிரதீக் குடும்பத்துடன் பெங்களூரு ெகம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குள் சூரத் விமானம் புறப்பட்டு சென்றுவிட்டது. இதையடுத்து பிரதீக் விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றார்.

அவர் வெளியே சென்ற சில நிமிடங்களில் விமான நிலையத்திற்கு ஒரு போன் வந்தது. அந்த போனில் பேசிய மா்ம நபர் பெங்களூருவில் இருந்து சூரத்துக்கு புறப்பட்டு சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதை கேட்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விமான நிலையத்தை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும், விமான நிலைய அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அழைப்பு பொய்யான தகவல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை விமான நிலைய அதிகாரிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் ஆய்வு செய்தனர்.

அப்போது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நேரமும், பிரதீக் போனில் பேசிய நேரமும் ஒரே நேரத்தில் இருந்தது. மேலும் அவர் அந்த நேரத்தில் போனில் பேசிக் கொண்டிருந்ததும் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இதனால் பிரதீக் மீது சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் விமான நிலைய போலீசார் பிரதீக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூரு ெகம்பேகவுடா விமான நிலைத்தில் நேற்று முன்தினம் பெறும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது

Next Story