பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாத அமைப்புகள் துவம்சம் இந்திய விமானப்படைக்கு வீர வணக்கம் துணை ராணுவ வீரர் குருவின் மனைவி கண்ணீர் பேட்டி
பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாத அமைப்புகளை துவம்சம் செய்த இந்திய விமானப்படைக்கு துணை ராணுவ வீரர் குருவின் மனைவி கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்தினார்.
மண்டியா,
காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதி வெடிகுண்டுகள் ஏற்றிய காருடன் வந்து இந்திய துணை ராணுவப்படையினர் சென்ற வாகனங்கள் மீது மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா குடிகெரே கிராமத்தைச் சேர்ந்த குருவும் வீரமரணம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் ஊடுருவி அங்கிருந்த பயங்கரவாத அமைப்புகளை அழித்துள்ளது. இது புலவாமா தாக்குதலுக்கு பதிலடி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா குடிகெரே கிராமத்தில் நேற்று புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் குருவின் மனைவி கலாவதி நிருபர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வீரமரணம் அடைந்த எனது கணவரின் 11-ம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று(அதாவது நேற்று) நடக்கிறது. இந்த நேரத்தில் எனது கணவரின் உயிரை பறித்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளை இந்திய ராணுவம் துவம்சம் செய்துள்ளது. பங்கரவாத அமைப்புகளை அழித்த இந்திய ராணுவத்துக்கும், விமானப்படைக்கும் எனது வீர வணக்கம். அதேபோல் நமது அரசுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுமட்டுமல்லாமல் இன்னும் எங்கெல்லாம் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்களை அழிக்க வேண்டும். அவர்களை விட்டுவிடக்கூடாது. நமது ராணுவத்துக்கு இன்னும் எவ்வளவு தைரியம் வேண்டுமோ, சக்தி வேண்டுமோ அதை கொடுங்கள். மேலும் அவர்களுடைய உயிருக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துகிறேன்.நமது ராணுவனத்தினர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். நான் அவர்களை நினைத்து பெருமை அடைகிறேன். அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கிறேன். நான் இனி என் கணவருடன் பேச வேண்டும் என்று நினைத்தாலும் அது நடக்காது.
இன்று(அதாவது நேற்று) நடக்கும் எனது கணவரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான அனைத்து செலவுகளையும் மந்திரி டி.சி.தம்மண்ணா ஏற்று நடத்துகிறார். அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story