தாராவியில் தோ்வு பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை


தாராவியில் தோ்வு பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2019 5:43 AM IST (Updated: 27 Feb 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் தேர்வு பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

மும்பை,

பீகாரை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது58). இவர் தாராவி பஸ்டெப்போ எதிரில் உள்ள ராஜீவ்காந்திநகர் குடிசைப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமீபத்தில் அர்ஜூனின் மனைவி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். எனவே வீட்டில் அர்ஜூன் மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்த அவரது மகன் அமர்ஜீத் (16), மகள் இருந்தனர். 10-ம் வகுப்பு தேர்வு வரும் 1-ந் தேதி தொடங்க உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அமர்ஜீத் பள்ளியில் நடந்த பிரிவு உபசார விழாவுக்கு சென்றான். பின்னர் விழா முடிந்து மதியம் வீட்டுக்கு வந்த அவன் நேராக மேல் தளத்துக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டான்.

இந்தநிலையில் மாலை நேரத்தில் வீட்டின் மாடிக்கு சிறுவனின் அக்காள் சென்றார். அவர் மாடியின் கதவை தட்டினார். ஆனால் வெகுநேரமாகியும் சிறுவன் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாடி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அங்கு தம்பி அமர்ஜீத் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சிறுவன் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், “அமர்ஜீத் தான் படிக்கும் பாடங்கள் படித்த சிறிது நேரத்தில் மறந்துவிடுவதாக தந்தையிடம் கூறியுள்ளான். அதற்கு தந்தை இந்த முறை தேர்வில் தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்வில் பார்த்து கொள்ளலாம் என நம்பிக்கை அளித்து உள்ளார். ஆனால் அவன் இப்படி தற்கொலை செய்து கொள்வான் என யாரும் நினைத்து பார்க்கவில்லை” என கண்ணீருடன் கூறினார்.

தேர்வு பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாராவி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story