தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தேனி,
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 63). அவருடைய மனைவி வனிதாதேவி (50). இவர்களுடைய மகன் சுரேஷ்குமார் (31). இவர்கள் 3 பேரும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
அலுவலக வளாகத்தில் திடீரென அவர்கள் தங்களின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அவர்கள் 3 பேரும் தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், நடராஜன் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்க முடிவு செய்து இருந்தார். இதற்கு சுரேஷ்குமாரின் மாமனாரிடம் பணம் பெற்று தோட்டம் வாங்குவதற்கு பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தோட்டத்தை சுரேஷ்குமார் பெயருக்கு பதிவு செய்யாமல், வேறு நபருக்கு பதிவு செய்து விட்டதாகவும், தற்போது அந்த தோட்டத்தை சுரேஷ்குமாரின் மாமனார் தரப்பினர் விற்பனை செய்துவிட்டு நடராஜனுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணையில் உள்ள நிலையில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் தர்மராஜ் தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில், நடராஜன் உள்பட 3 பேரும் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர்களை தடுக்க முயன்ற போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் நடராஜன், வனிதாதேவி, சுரேஷ்குமார் ஆகிய 3 பேர் மீதும் தற்கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட 3 பேரையும் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீப காலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, இதுபோன்ற தற்கொலை முயற்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ள நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயி ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்றும் 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story