வன விலங்குகளின் தாகத்தை தணிக்க மேலும் 6 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அதிகாரிகள் தகவல்


வன விலங்குகளின் தாகத்தை தணிக்க மேலும் 6 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 28 Feb 2019 4:00 AM IST (Updated: 27 Feb 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் வன விலங்குகளின் தாகத்தை தணிக்க மேலும் 6 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் மகாதீப மலை, சொரகொளத்தூர் மலை மற்றும் கவுத்தி மலை உள்ளது. இந்த மலைகளில் மான், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, முயல், எரும்புதின்னி போன்ற வன விலங்குகளும் மயில், புறா போன்ற பறவைகளும் உள்ளன.

தற்போது எதிர்பார்த்த அளவு மழையில்லாததால் காடுகளில் உள்ள நீர் ஊற்றுகள், குளங்கள் வற்றிவிட்டன. தண்ணீர் இல்லாததால் வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-


திருவண்ணாமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட மகாதீப மலை வனப்பகுதியில் 6 தண்ணீர் தொட்டிகளும், சொரகொளத்தூர் பகுதியில் 2 தண்ணீர் தொட்டிகளும், கவுத்தி மலையில் 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் அனைத்தும் சுமார் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையாகும்.

இந்த தொட்டிகளில் மாதத்துக்கு ஒரு முறை தண்ணீர் டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. தண்ணீர் குறைந்தவுடன் உடனே தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில் தற்போது புதிதாக 6 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இடம் தேர்வு செய்து வருகிறோம். விரைவில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இந்த தண்ணீர் தொட்டிகளை நாங்கள் தினமும் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story