கல்லூரி மாணவிகள் பாலியல் பலாத்காரம் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்றக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


கல்லூரி மாணவிகள் பாலியல் பலாத்காரம் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்றக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2019 4:00 AM IST (Updated: 27 Feb 2019 11:29 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவும், கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மாலை தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தனம் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நகர அவைத்தலைவர் பழனிசாமி, துணை செயலாளர்கள் கார்த்திகேயன், நாச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி கண்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாலசந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி பஸ் நிலையம், காந்தி சிலை, தேர்நிலை, கோட்டூர் ரோடு ஆகிய இடங்களில் இன்று (வியாழக்கிழமை) தெருமுனை பிரசார கூட்டம் நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) பொள்ளாச்சி பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டமும், 4-ந்தேதி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இதற்கிடையில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.

Next Story