மின் மோட்டார் பழுது கணபதி நகரில் குடிநீர் தட்டுப்பாடு


மின் மோட்டார் பழுது கணபதி நகரில் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 28 Feb 2019 4:15 AM IST (Updated: 27 Feb 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

மின் மோட்டார் பழுதடைந்து உள்ளதால், கணபதி நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே கணபதி நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு தாளூர் செல்லும் சாலையோரத்தில் சேரங்கோடு ஊராட்சி மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன் அடைந்து வந்தனர். மின் மோட்டார் மூலம் குழாய் வழியாக குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மின்மோட்டார் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெண்கள் காலி குடங்களுடன் நீண்ட தூரம் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு குடிநீருக்காக நடந்து செல்லும் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் காணப்படுகிறது. எனவே மின் மோட்டாரில் உள்ள பழுதை சரி செய்து, மீண்டும் குடிநீர் வினியோகத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று சேரங்கோடு ஊராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் குடிநீர் தேவையை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கணபதி நகர் பொதுமக்களின் தாகத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story