சீர்காழி அருகே மருதங்குடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சீர்காழி அருகே மருதங்குடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி,
சீர்காழி அருகே மருதங்குடி கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு, தோப்புத்தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புநீராக மாறி உள்ளதால், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் உப்புநீராகவே உள்ளது. இதனை பொதுமக்கள் துணி துவைக்கவும், பாத்திரங்கள் கழுவுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், குடிநீர் உப்புநீராக மாறியதால் குடிப்பதற்கு லாயகற்றதாக உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக மருதங்குடி கிராமத்தில் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆலஞ்சேரி அல்லது வரவக்குடி கிராமங்களுக்கு சென்று குடிநீரை கொண்டு வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மருதங்குடி கிராமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story