புத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் மறு சீரமைப்பு பணி அதிகாரி ஆய்வு
புத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் மறு சீரமைப்பு பணிகளை, நெடுஞ்சாலை துறை திருச்சி மண்டல கண்காணிப்பு பொறியாளர் பழனி ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்,
நாகை புத்தூர் ரெயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சிறிது காலத்திலேயே விரிசல் ஏற்பட்டது. இதனால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு இந்த புத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
ஆதலால் இந்த பாலத்துக்கு பதில் மாற்று பாதையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. பின்னர் அவ்வப்போது பழுது நீக்கும் பணி நடைபெற்று ஒரு சில வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
இதையடுத்து ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை திருச்சி மண்டல கண்காணிப்பு பொறியாளர் பழனி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் சிமெண்டு மற்றும் கம்பிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி, உதவி பொறியாளர்கள் ராமநாதன், பாரதிதாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story