குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குடிநீர் வழங்கக்கோரி ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அய்யனேரி காலனியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இதனால் இந்த பகுதி மக்கள் கடந்த 2–ந் தேதி தங்கள், கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக குடிநீர் ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் நாட்கள் பல கடந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் கிராமத்தில் குடிநீர் ஏற்பாடு செய்யக்கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகளும் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அந்த கிராமத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.