சீனா, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல் ரூ.7 கோடி அரிய கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல் 2 பேர் கைது


சீனா, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல் ரூ.7 கோடி அரிய கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2019 11:30 PM GMT (Updated: 27 Feb 2019 7:14 PM GMT)

இலங்கை, சீனாவுக்கு கடத்துவதற்காக சென்னையில் உள்ள குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட அரிய கடல்வாழ் உயிரினங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை மண்ணடி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்ட அரிய கடல்வாழ் மற்றும் வன உயிரினங்கள் கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குடோனில் சோதனை செய்தனர்.

அப்போது அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப்பிடித்தனர். பின்னர் குடோனில் சோதனை செய்தபோது, அங்கு பெரிய பிளாஸ்டிக் பைகளில் பதப்படுத்தப்பட்ட கடல் குதிரை, குழாய் மீன்கள், சுறா மீன் குஞ்சுகள், கடல் வெள்ளரி போன்றவை வைக்கப்பட்டு இருந்தன. அவற்றுடன் எறும்பு திண்ணி உள்ளிட்ட பல விலங்குகளும் பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

ராமேசுவரம் மற்றும் சென்னை காசிமேடு பகுதிகளில் இருந்து இவற்றை வாங்கி மும்பை வழியாக இலங்கை, சீனா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சர்வதேச சந்தையில் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியாகும். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் மற்றும் வன உயிரினங்கள் அனைத்தும் தமிழ்நாடு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பலவகையான கடல் குதிரைகள், குழாய் மீன்கள் உள்ளிட்டவை சீனாவில் மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. சுறா மீன்கள் சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பிடிபட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேற்கண்ட தகவலை சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்திரி தெரிவித்து உள்ளார்.

Next Story