சமையல் செய்யாமல் செல்போனில் பேசியதால் கண்டிப்பு: காதல் கணவர் திட்டியதால் இளம்பெண் தற்கொலை
சமையல் செய்யாமல் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததை கண்டித்து காதல் கணவர் திட்டியதால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
மதுரவாயலை அடுத்த நூம்பல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நல்லையா(வயது 24). சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கிரிஜா(22). வளசரவாக்கத்தில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கிரிஜா அடிக்கடி செல்போனில் அதிகநேரம் பேசி வந்ததாகவும், இதனால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து நல்லையா வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது கிரிஜா, வழக்கம்போல் சமையல் செய்யாமல் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை நல்லையா கண்டித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. பின்னர் நல்லையா, தனது அறைக்குள் சென்று தூங்கி விட்டார்.
வீட்டில் ஹாலில் படுத்து இருந்த கிரிஜா, செல்போனில் பேசியதற்காக தனது காதல் கணவர் தன்னை திட்டியதால் மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவில் நல்லையா எழுந்து வந்து பார்த்தபோது, தனது மனைவி கிரிஜா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், தூக்கில் தொங்கிய கிரிஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கிரிஜாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.