பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவசந்திரன் நினைவிடத்தில் நடிகர் விவேக் அஞ்சலி


பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவசந்திரன் நினைவிடத்தில் நடிகர் விவேக் அஞ்சலி
x
தினத்தந்தி 28 Feb 2019 4:15 AM IST (Updated: 28 Feb 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவசந்திரனின் நினைவிடத்தில் நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார்.

ஜெயங்கொண்டம்,

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் நேரில் வந்து ஆறுதல் கூறி, நிதி உதவி அளித்து செல்கின்றனர்.

வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் சிவசந்திரனின் மனைவி காந்திமதி கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான பணி நியமன ஆணையை வாங்க, அவரது மாமியார் சிங்காரவள்ளி, மாமனார் சின்னையன் ஆகியோருடன் தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க சென்னை சென்றார்.

இந்த நிலையில் சிவசந்திரன் வீட்டிற்கு நேற்று மதியம் வந்த நடிகர் விவேக், வீட்டில் உள்ள சிவசந்திரனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி விட்டு, சிவசந்திரனின் தங்கை வாய் பேச முடியாத, காது கேளாத ஜெயசித்ராவுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்துக்கு சென்று, மலர் வளையம் வைத்து விவேக் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது விவேக் அங்கிருந்த பள்ளி மாணவ-மாணவிகளிடம் தாங்களும் படித்து பெரிய பதவிகளுக்கு வர வேண்டும், தேர்வு எழுத போகும் முன்பு மாணவர்கள் வீரமரணம் அடைந்த சிவசந்திரனின் சமாதியில் மரியாதை செலுத்தி விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது பாரத தாயின் புதல்வர்களில் ஒருவரைத் தான் நாம் இழந்துள்ளோம். வல்லரசு நாடுகளில் ஒன்றான இந்தியா எப்பொழுதும் அண்டை நாடுடன் நட்புடன் செல்வதை தான் அதிகம் விரும்புகிறது. தற்போது நடந்த இந்த எதிர்தாக்குதல் இந்தியாவில் 40 வீரர்களின் இழப்பை ஈடுகட்டுவதற்காக நடத்தப்பட்டதாகும். அதுவும் இந்தியா ஒரு வல்லரசு நாடு என்பதை காட்டுவதற்காக நடந்த ஒரு தாக்குதல் ஆகும். இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஒரு இடைஞ்சல் வந்தால் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க இயலாது. மேலும் இது ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயம். இதை ஒரு தனி மனிதனாக இருந்து நான் ஏதும் கருத்துக் கூற இயலாது இருப்பினும், அரசாங்கம் இதற்கு தகுந்த முடிவெடுக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story