டாஸ்மாக் கடைகளில் 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி


டாஸ்மாக் கடைகளில் 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2019 4:30 AM IST (Updated: 28 Feb 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளில் 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் ரூ.3 கோடி மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தே.மு.தி.க.வும் எங்களுடைய கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறந்து விளங்கும் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் மாவட்டங்களுக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு 90 சதவீதம் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளித்து உள்ளார்கள். தற்போது சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை விதித்து உள்ளது. இதனை எதிர்த்து அந்த நிர்வாகம் மேல்முறையீடு செய்தால், தமிழக அரசும் ஆலையை திறக்க தடை விதிக்கக்கோரி மேல்முறையீடு செய்யும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலைக்கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க மத்திய அரசின் நிதிஉதவியுடன் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். பிளாஸ்டிக் தடை அமலில் உள்ள நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 100 சதவீதம் ஒழிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.


Next Story