பல்லடம் அருகே பரிதாப சம்பவம்: திருமணம் முடிந்த 2 நாளில் மனைவி தாலியை கழற்றி கொடுத்து விட்டு பிரிந்ததால் ரியல் எஸ்டேட் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை


பல்லடம் அருகே பரிதாப சம்பவம்: திருமணம் முடிந்த 2 நாளில் மனைவி தாலியை கழற்றி கொடுத்து விட்டு பிரிந்ததால் ரியல் எஸ்டேட் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Feb 2019 5:15 AM IST (Updated: 28 Feb 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே காதல் திருமணம் செய்த 2 நாளில் மனைவி தாலியை கழற்றி கொடுத்து விட்டு பிரிந்ததால் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பல்லடம்,

பல்லடம் அம்மாபாளையம் சி.எம்.நகரை சேர்ந்தவர் ஹரிகரன் என்ற தேவா (வயது 22). இவர் தனது உறவினருக்கு சொந்தமான பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் உள்ள கிரீன்லேண்ட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வராததால் அவரது தாயார் குணசுந்தரி நேற்று காலை ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது ஹரிகரனின் இருசக்கர வாகனம் அந்த நிறுவனத்தின் முன்பு நின்றது. நிறுவனத்தின் ‌ஷட்டரை திறந்து பார்த்தபோது அலுவலகத்துக்குள் சால்வையால் ஹரிகரன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அதிர்ச்சி அடைந்த குணசுந்தரி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் துணையுடன் ஹரிகரனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஹரிகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து குணசுந்தரி பல்லடம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனது மகன் ஹரிகரன் பல்லடம் கிரீன் லேண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கு கணக்காளராக வேலை பார்த்து வந்த வடுகபாளையத்தை சேர்ந்த சந்திரிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3–ந் தேதி அன்று பல்லடம்–தாராபுரம் ரோட்டில் உள்ள கள்ளக்கிணறு கருப்பராயன் கோவிலில் எனது மகனும் அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அன்றே இருவரும் கொடைக்கானல் சென்று விட்டு 2 நாட்கள் கழித்து ஜனவரி மாதம் 5–ந் தேதி பல்லடம் வந்தனர். இந்த நிலையில் அந்த பெண் அன்றே தாலியை கழற்றி எனது மகனிடம் கொடுத்து விட்டு, எனது மகனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

திருமணம் முடிந்த 2 நாளில் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் எனது மகன் மனம் உடைந்த நிலையில் புலம்பி வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் தான் வேலை பார்த்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் ஹரிகரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதியுள்ள கடிதங்களையும் போலீசார் கைப்பற்றி அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹரிகரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது தாயாருக்கு எழுதிய கடிதத்தில், “அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். நானும் முடிந்தவரை சந்திரிகாவை மறக்க நினைத்தேன். ஆனால் அவளை என்னால் மறக்க முடியவில்லை. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். சீக்கிரமாக காயத்ரி அல்லது சத்தியா வயிற்றில் நான் பிறப்பேன். அப்படி பிறந்தால் தனுஷ் என்று பெயர் வையுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் தனது மாமா முத்துக்குமாருக்கு ஹரிகரன் எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில் ‘‘மாம்ஸ் லவ் யூ எல்லோரும் என்னை வெறுத்த போது எனக்கு முழு ஆதரவு கொடுத்தது நீங்கள்தான். ஆனால் என்னால் சந்திரிகா இல்லாமல் வாழ முடியவில்லை. உங்களை விட்டு பிரிய சத்தியமா மனசு வரலே. பேசாமல் நான் உங்கள பார்க்காமல் இருந்திருக்கலாம். பிரிய மனசு வரல எழுதும்போது கண்ணில் கண்ணீர் வருதுங்க என்னை மன்னிச்சிருங்க!’’ என்று எழுதியுள்ளார்.

சகோதரி காயத்ரிக்கு ஹரிகரன் எழுதியுள்ள கடிதத்தில் ‘‘காயத்ரி என்னை மன்னிச்சிடுபுள்ள. மத்த பசங்க மாதிரி என்னால ஒருத்தி கூட வாழ்ந்துட்டு அடுத்த பொன்னுகூட வாழ முடியாது. ஓகே என்ன பன்றது. விடு சீக்கிரமா நல்லது நடக்கும். நான் இருந்தாலும் பிரச்சினைதான். என்ன பார்த்து நீங்க கஷ்டப்படுவீங்க. அத என்னால பார்க்க முடியல புள்ள’’ என்றும், மற்றொரு சகோதரியான சத்தியாவிற்கு எழுதிய கடிதத்தில் ‘‘எது நடந்தாலும் நீ கண்டுக்க மாட்ட, ஓகே பரவாயில்லை என்னோட இறுதி சடங்கில் முடிஞ்சா வந்து என்னுடைய முகத்தை பாரு. அப்படி வர முடியலன்னா கூட பரவாயில்லை. காளைதமிழனை நல்ல படிக்க வை. அவன அடிக்காத என் மேல் சத்தியம்’’ என்று கூறப்பட்டிருந்தது.


Next Story