விளையாடிய போது சம்பவம்: கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி
திருப்பூரில் வீட்டின் அருகே விளையாடிய போது கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக பலியான
திருப்பூர்,
திருப்பூர் புஷ்பாநகர் 3–வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டில் கீரனூரை சேர்ந்த ஆஷிக் அலி (வயது 27) என்ற தையல் தொழிலாளி தனது மனைவி பாத்திமாவுடன் (24) வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு தவ்பீக் (7), முகமத் தஸ்லின் (2½) என 2 மகன்கள் உள்ளனர்.
இதில் தவ்பீக் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் அந்த பகுதியில் 60 அடி ஆழம் கொண்ட ஒரு கிணறு உள்ளது. அந்த குடியிருப்பில் வசித்து வருபவர்கள் அனைவரும் அந்த கிணற்றில் கயிறு கட்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.
இதுபோல் நேற்று மாலை அந்த கிணற்றில் அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தண்ணீர் எடுத்தனர். ஆனால் அந்த கிணற்றை மூடி போட்டு மூடாமல் அப்படியே திறந்தபடி விட்டு சென்றுள்ளனர். இதற்கிடையே முகமத் தஸ்லின் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தான்.
உடனே சத்தம் கேட்டு அங்கு பாத்திமா வந்தார். அவர் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகனை பார்த்து கூச்சலிட்டார். பாத்திமாவின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அங்கு குடியிருப்பவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும், சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து மூழ்கிய தகவல் கிடைத்ததும், அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். பின்னர் கொக்கியை பயன்படுத்தி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதன் பின்னர் மீட்கப்பட்ட சிறுவன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன்இன்றி முகமத் தஸ்லின் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.