பாரதீய ஜனதா ஆலோசனை கூட்டம்: ரங்கசாமி-இல.கணேசன் சந்திப்பு; தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்


பாரதீய ஜனதா ஆலோசனை கூட்டம்: ரங்கசாமி-இல.கணேசன் சந்திப்பு; தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்
x
தினத்தந்தி 28 Feb 2019 5:00 AM IST (Updated: 28 Feb 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நடந்த பாரதீய ஜனதா ஆலோசனை கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கலந்து கொண்டார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட உள்ளார். இந்தநிலையில் பாரதீய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நேற்று புதுவை வந்தார். அவரை பாரதீய ஜனதா அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி நேரில் சந்தித்து சால்வை அணிவித்தார்.பின்னர் இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசினர். இதை தொடர்ந்து புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, என்.எஸ்.ஜெ.ஜெயபால், முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் உள்பட கூட்டணி கட்சிகளில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெறுவது தொடர்பாக புதிய வியூகம் வகுக்கப்பட்டது.

முன்னதாக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் புலவாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.

இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. நாங்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அரசியலாக்க விரும்பவில்லை. தே.மு.தி.க. உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஓரிருநாளில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story