மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு கிடுக்குப்பிடி கவர்னர் கிரண்பெடியின் அடுத்த அதிரடி


மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு கிடுக்குப்பிடி கவர்னர் கிரண்பெடியின் அடுத்த அதிரடி
x
தினத்தந்தி 28 Feb 2019 3:30 AM IST (Updated: 28 Feb 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க உதவும் ஆல்கோமீட்டர் கருவியை வாங்குமாறு கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துவதில் கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி இடையே முரண்பாடு ஏற்பட்டது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திதான் படிப்படியாக கட்டாய ஹெல்மெட் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்–அமைச்சர் கூறினார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை காட்டிய கவர்னர் கிரண்பெடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக போலீசார் நாள்தோறும் 1000–க்கும் மேற்பட்டவர்களின் வாகன எண்களை குறித்து அபராதம் விதித்து நோட்டீசு அனுப்பி வருகிறார்கள்.

போலீசார் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் கட்டாய ஹெல்மெட் திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவில்லை. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்கள் சொற்பமான அளவிலேயே உள்ளனர்.

இந்தநிலையில் அடுத்த அதிரடிக்கு கவர்னர் கிரண்பெடி தயாராகி உள்ளார். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பது என்பதுதான் அவரது அடுத்த திட்டம்.

இதற்கு வசதியாக மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் ஆல்கோமீட்டர் கருவியை வாங்கிடுமாறு கவர்னர் கிரண்பெடி போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் சோதனை மற்றும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரை கண்டறியும் சோதனை அவசியம் என்றும் சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி பதிவிட்டுள்ளார்.

புதுவையை பொறுத்தவரை மது என்பது பிரபலமாக உள்ளது. வெளி மாநிலத்தவர் பலரும் வார இறுதிநாட்களில் மது அருந்துவதற்காகவே புதுவைக்கு சுற்றுலா வருகின்றனர். இதுபோன்ற சோதனைகள் நடைபெறும்பட்சத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களின் நிலைமை என்னவாகும்? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மாலை நேரங்களில் உள்ளூர்வாசிகளில் பெரும்பாலானவர்கள் மது அருந்துவது என்பதும் வாடிக்கையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story