தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே சேதம் அடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே சேதம் அடைந்த மின்கம்பங்கள் உடனடியாக சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பிள்ளையார்பட்டி,
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே புதிய வீட்டு வசதி வாரியம் நெய்தல் நகர் பகுதியில் வல்லம் நம்பர்-1 சாலையை ஒட்டி வரிசையாக மூன்று மின்கம்பங்கள் சிமெண்டு காரைகள் பெயர்ந்து போய் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளது. இந்த சாலை புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலை என்பதால் பகல் இரவு எந்த நேரமும் வாகனங்கள் இந்த வழியாக சென்று வந்த வண்ணம் இருக்கும். மேலும் பொதுமக்களும் அதிக அளவில் இந்த சாலை வழியாக நடந்து சென்று வருகிறார்கள்.
இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளதால் இங்கு வசித்து வரும் பொதுமக்கள் இந்த சாலையை அடிக்கடி தங்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். சிமெண்டு காரைகள் பெயர்ந்து போய் எந்த நேரத்திலும் விழுந்து விடும் வகையில் உள்ள இந்த மின் கம்பங்களால் பெரிய அளவில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே ஏதேனும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சேதம் அடைந்து உள்ள இந்த மின்கம்பங்களை உடனடியாக அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நட வேண்டும் என்று இந்த பகுதியில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள், பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சேதம் அடைந்து உள்ள இந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றுவதற்கு மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story