ரெயில் முன் பாய்ந்து மாணவர் சாவு, சோகத்தில் தாயும் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து மாணவர் சாவு, சோகத்தில் தாயும் தற்கொலை
x
தினத்தந்தி 28 Feb 2019 4:00 AM IST (Updated: 28 Feb 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சோகத்தில் அவரது தாயாரும் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள அங்காளம்மன் காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவர் சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 40). இவர்களது மகன் விக்னேஷ் (20), மகள்கள் விவேதா(19), வினிதா(10).

விக்னேஷ் ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை விக்னேஷ் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள தண்டவாளம் அருகே சென்ற அவர், மன்னார்குடியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்து செய்தியை கேட்ட ராஜலட்சுமி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

சிறிது நேரத்தில் வீட்டில் ராஜலட்சுமியும் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

இது பற்றி கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்காக விக்னேசிடம் அவரது தாயார் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணத்தை எடுத்துக்கொள்ளும்படி கூறினாராம். ஆனால் அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது கணக்கில் பணம் இல்லை என்று வந்துள்ளது.

இதுபற்றி விக்னேஷ் அவரது தாயாரிடம் கூறியபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் மனமுடைந்த விக்னேஷ் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், மகன் இறந்த சோகத்தில் ராஜலட்சுமியும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. 

Next Story