ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விலகியதால் மாணவர் சேர்க்கை பாதிக்காது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விலகியதால் மாணவர் சேர்க்கை எந்த வகையிலும் பாதிக்காது, என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் கெரகோடஅள்ளியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்தது. மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் கடந்த கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 42 சேவை மையங்களை தமிழக அரசு உருவாக்கியது. அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்ட இந்த மையங்கள் மூலம் மாணவர் சேர்க்கைக்கான சேவை வழங்கப்பட்டது. இதனால் கலந்தாய்வுக்காக மாணவ-மாணவிகள் சென்னை சென்று அலையும் நிலை தவிர்க்கப்பட்டது.
அந்தந்த மாவட்டங்களிலேயே சேர்க்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்காக 14 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்பட்டார். இந்த குழுவில் தொழில்நுட்ப கல்வி அதிகாரிகள், பொறியியல் கல்லூரி முதல்வர்கள் என மேலும் 4 பேர் சேர்க்கப்பட்டனர். அதன்பின்னரும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்தான் ஒருங்கிணைப்பு குழு தலைவராக செயல்பட்டார். துணைவேந்தருடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக தொழில்நுட்பக்கல்வி இயக்கக ஆணையரை இந்த குழுவின் இணை தலைவராக அரசு நியமித்துள்ளது.
சென்னையில் மட்டுமே நடந்த மாணவர்சேர்க்கை கலந்தாய்வு தமிழகத்தில் 42 மையங்களில் நடத்தப்பட்ட நிலையில் அந்த பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் இணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் என்ன காரணத்திற்காக கலந்தாய்வு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் என்று தெரியவில்லை. அரசு அவரை அந்த பதவியில் இருந்து நீக்கவில்லை. அவர் வகித்த தலைவர் பதவி எந்த விதத்திலும் மாற்றி அமைக்கப்படவும் இல்லை.
ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு கூடுதல் பலம் சேர்க்கவே இணை தலைவர் மற்றும் 2 பொறியியல் கல்லூரி முதல்வர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டனர். என்ன காரணத்திற்காக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா செய்தார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் இந்த பதவியில் இருந்து விலகியதால் வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
Related Tags :
Next Story