முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக வந்தபோது சேலம் ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த போலீஸ்காரர் பரிதாப சாவு
முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக வந்தபோது சேலம் ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
சேலம்,
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள விடிவெள்ளி நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 38). இவர் தர்மபுரியில் ரெயில்வே போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் ரெயில் மூலம் சென்னை சென்றார்.
இதற்கான பாதுகாப்பு பணிக்காக தர்மபுரியில் இருந்து ரெயில் மூலம் மோகனசுந்தரம் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது ரெயிலில் இருந்து இறங்கிய மோகனசுந்தரம் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் வெடித்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் மோகனசுந்தரத்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர். அதன்பேரில் மோகனசுந்தரம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மோகனசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.
இதனிடையே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மோகனசுந்தரம் ஓய்வில்லாமல் தொடர்ந்து இரவு பணி பார்த்து வந்ததால், ரெயிலில் வரும்போது மயங்கி விழுந்து இறக்கும் நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மோகனசுந்தரத்தின் குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மோகனசுந்தரத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையில் மோகனசுந்தரத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மோகனசுந்தரத்தின் மனைவி சக்திக்கு அரசு வேலையும், ரூ.50 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும். இதற்கு சம்மதித்தால் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், மோகனசுந்தரத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story