ரெயில் பயணிகளிடம் திருட்டு; டெல்லியை சேர்ந்த 5 பேர் கைது ஒரு கிலோ தங்க நகைகள் மீட்பு
ரெயில் பயணிகளிடம் திருடி வந்த டெல்லியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
பெங்களூரு,
பெங்களூரு ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பீமாசங்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பியும், அவர்கள் அயர்ந்து தூங்கும் சந்தர்ப்பத்திலும் தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போன சம்பவங்கள் தொடர்பாக பெங்களூரு ரெயில்வே போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு ரெயில் பயணிகளிடம் திருடி வந்ததாக 5 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் டெல்லியை சேர்ந்த ரன்வீர் சிங், வினோத், லலித்குமார், சுபாஷ், சப்பீர் என்பதாகும். இவர்கள் 5 பேரும் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்து தங்கி இருந்துள்ளனர். .
அப்போது பெங்களூருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரெயில்களில் 5 பேரும் பயணிப்பார்கள். ரெயிலில் வசதி படைத்தவர்கள் பயணம் செய்கிறார்களா? என்பதை அடையாளம் கண்டு, அவர்களது உடைமைகள் இருக்கும் பைகளை இரவு நேரங்களில் திருடுவதை தொழிலாக வைத்திருந்தனர். சில நேரங்களில் ரெயிலில் பயணிக்கும் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளையும் கைதான 5 பேரும் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான 5 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு பயணிகளிடம் திருடிய ஒரு கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் 5 பேர் மீதும் சிட்டி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு பீமாசங்கா் கூறினார்.
Related Tags :
Next Story