பேடகொட்டா, பசவனஹள்ளி பகுதிகளில் 354 பயனாளிகளுக்கு அரசு வீடுகள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று வழங்குகிறார்
பேடகொட்டா, பசவனஹள்ளி பகுதிகளில் 354 பயனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வீடுகளை முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வியாழக்கிழமை) வழங்குகிறார்.
குடகு,
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவில் திட்டஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த ஆண்டு (2018) ஆதிவாசி மக்கள், வீடுகள் இல்லாத மக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் திடீரென்று குடிசை அமைத்து குடியேறினர்.
இதை அறிந்த வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு வசித்து வந்தவர்களை வெளியேற்றினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மக்கள், தங்களுக்கு அரசு சார்பில் நிலம் வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அதே பகுதியில் சாலையோரமாக கூடாரங்கள் அமைத்து இரவு-பகலாக ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டங்கள் நடத்தினர்.
இதைதொடர்ந்து அப்போதைய முதல்-மந்திரி சித்தராமையா, சோமவார்பேட்டை தாலுகா குசால் நகர் அருகே பேடகொட்டா, பசவனஹள்ளி ஆகிய பகுதிகளில் 528 பேருக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த கோரிக்கையை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அதன்படி அரசு சார்பில் பேடகொட்டா பகுதியில் 8 ஏக்கரும், பசவனஹள்ளியில் 6 ஏக்கர் நிலமும் வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டது. அதில் பசவனஹள்ளியில் 174 வீடுகளும், பேடகொட்டாவில் 354 வீடுகளும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்தப் பகுதியில் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. இந்த வீடுகள் ஒரு ஹால், ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடுகளின் தரைத்தளத்தில் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள் தலா ரூ.3.90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. பேடகொட்டா, பசவனஹள்ளி ஆகிய இரு பகுதிகளிலும் தற்போது 354 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த 354 வீடுகளையும் பயனாளிகளிடம் வழங்கும் விழா இன்று (வியாழக்கிழமை) பசவனஹள்ளியில் நடக்கிறது.
இந்த விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நில உரிமை பத்திரத்தை வழங்குவதன் மூலமாக வீடுகளை வழங்குகிறார். அத்துடன் குடகு மாவட்டத்தில் ரூ.143 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைக்கிறார். மேலும் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளையும் முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கிவைக்கிறார்.
இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில சுற்றுலாத் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சா.ரா.மகேஷ் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். இந்த நிலையில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நேற்று மாவட்ட கலெக்டர் அனீஸ் கண்மணி ஜாய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் மேற்கண்ட தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதையொட்டி பசவனஹள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story