கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என உளவுத்துறை எச்சரிக்கை கர்நாடக கடலோர பகுதியில் இந்திய கடற்படை உஷார் நிலை


கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என உளவுத்துறை எச்சரிக்கை கர்நாடக கடலோர பகுதியில் இந்திய கடற்படை உஷார் நிலை
x
தினத்தந்தி 28 Feb 2019 4:30 AM IST (Updated: 28 Feb 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் கர்நாடக கடலோர பகுதியில் இந்திய கடற்படை உஷார் நிலையில் உள்ளது.

மங்களூரு, 

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத அமைப்பின் ஒரு பயங்கரவாதி, இந்திய துணை ராணுவப்படையினர் சென்ற வாகனங்கள் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்து பயங்கர தாக்குதல் நடத்தினான். இதில் 40 இந்திய துணை ராணுவப்படையினர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அங்கிருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்தது. இந்த பதிலடி தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று காலையில் பாகிஸ்தான் விமானப்படை, இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், ஒரு விமானப்படை வீரரை கைது செய்துள்ளதாகவும் அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் - இந்தியா இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் கடல் வழியாக வந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி இந்திய பகுதிகளை தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்பேரில் இந்திய கடலோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி கர்நாடக கடலோர பகுதிகளான உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களின் கடலோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவத்தினரும், கடலோர காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் கடற்படையும் உஷார் நிலையில் உள்ளது. கார்வார் துறைமுக பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள் எந்த நேரத்திலும் பதிலடி தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு தயாராக உள்ளன. இந்திய கடல் எல்லைக்குள்ளும் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பாதுகாப்பு குறித்து நேற்று கார்வார் துறைமுகத்தில் வைத்து கடற்படை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. முடிவில் உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி எந்த நேரத்திலும் பதிலடி தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. பயங்கரவாதிகள் எந்த நேரத்திலும் ஊடுருவலாம் என்பதால் கர்நாடக கடலோர பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் மங்களூரு டவுன், பஜ்பே சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story