விடுமுறையை ரத்து செய்துவிட்டு ராணுவ பணிக்கு திரும்பிய கர்நாடக வீரர் சிரித்த முகத்துடன் குடும்பத்தினர் வழியனுப்பி வைத்தனர்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், விடுமுறையை ரத்து செய்துவிட்டு ராணுவ பணிக்கு கர்நாடக வீரர் அவசரமாக திரும்பினார். அவரை சிரித்த முகத்துடன் அவரது குடும்பத்தினர் வழியனுப்பி வைத்தனர்.
பெங்களூரு,
காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் இந்திய துணை ராணுவ படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பலிவாங்கும் விதமாக இந்திய விமானப்படையினர், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி தரைமட்டமாக்கினர். இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விடுமுறையில் வந்திருந்த கர்நாடக ராணுவ வீரர் ஒருவர், விடுமுறையை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக பணிக்கு திரும்பினார். அவரை அவரது குடும்பத்தினர் சிரித்த முகத்துடன் வழியனுப்பிவைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. இதுகுறித்த விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் கலபுரகி டவுன் அம்பிகா நகரை சேர்ந்த மகாதேவ் கும்பார். இவர் கடந்த 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவர் 25 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊரான கலபுரகிக்கு வந்தார்.
எல்லையில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளதால், ராணுவ அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு உடனே பணிக்கு திரும்பும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் உடனடியாக விடுமுறையை ரத்து செய்துவிட்டு நேற்று நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மூலம் புறப்பட்டு சென்றார்.
அவர் வீட்டில் இருந்து புறப்படும் முன், தனது குழந்தைக்கு அன்பு முத்தமிட்டார். அவரை மனைவி உள்பட குடும்பத்தினர் கனத்த இதயத்துடன் சிரித்தபடியே வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மகாதேவ் கும்பார் கூறுகையில், “எதிரிகளை அழிக்க நான் ஆர்வத்துடன் காஷ்மீருக்கு புறப்பட்டு செல்கிறேன்” என்றார்.
அவரது தந்தையும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story