செல்போன் கடையை சூறையாடியதால் ஆத்திரம்: திருச்சியில் வாலிபர் வெட்டிக் கொலை 4 பேர் கைது
திருச்சியில் செல்போன் கடையை சூறையாடிய ஆத்திரத்தில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் அருண்குமார் (வயது 20). இவர் இருசக்கர வாகனங்களுக்கு சீட் கவர் தைக்கும் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் என்.எம்.கே. காலனியை சேர்ந்த அப்துல்லா.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு சென்றனர். அங்கு அப்துல்லாவின் செல்போனை பழுது நீக்கி தருமாறு கொடுத்தனர். ஆனால் செல்போன் கடை நடத்திவரும் அதேபகுதியை சேர்ந்த வினோத்குமார் (32) பழுது நீக்கி தர முடியாது என்று மறுத்து விட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அப்துல்லாவும், அருண்குமாரும் செல்போன் கடையின் மேஜை மற்றும் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தனது நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த கரிகாலன் (35), சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த திலீப் (23), முதலியார்சத்திரத்தை சேர்ந்த சிவா (23), மதன், பிரகாஷ், மல்லிகைபுரம் அன்னைநகரை சேர்ந்த ரீகன்(26), கல்கண்டார்கோட்டையை சேர்ந்த வினோத் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் இரவு முதலியார் சத்திரம் பகுதிக்கு வந்து இருவரையும் தேடி அலைந்தனர்.
அப்போது அப்துல்லாவும், அருண்குமாரும் முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களை கண்டதும் அந்த கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவர்களுக்கு கை, தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் அங்கு சென்று படுகாயத்துடன் கிடந்த 2 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை அருண்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்துல்லாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் நேற்று அதிகாலை அருண்குமார் இறந்ததையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக வினோத்குமார், கரிகாலன், சிவா, ரீகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story