நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2019 3:30 AM IST (Updated: 28 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை,

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மாவட்ட தலைவர் செல்வசுந்தரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமாரசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தமிழக அரசு ஏழைகளுக்கு வழங்கும் உதவித்தொகை ரூ.2 ஆயிரம் என்பதை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசின் அனைத்து திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டம் 2016-ஐ தமிழகத்தில் உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பத்தை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் என்று அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர்கள் தியாகராஜன், இசக்கி, இணை செயலாளர்கள் ஆத்தியப்பன், அகஸ்தியராஜன் உள்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர மோட்டார் சைக்கிளில் வந்து கலந்து கொண்டனர். 

Next Story