கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு - மத்திய, மாநில ஆட்சிகளை அகற்ற சூளுரைப்போம்


கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு - மத்திய, மாநில ஆட்சிகளை அகற்ற சூளுரைப்போம்
x
தினத்தந்தி 27 Feb 2019 10:45 PM GMT (Updated: 27 Feb 2019 9:42 PM GMT)

மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடி ஆட்சியையும் அகற்ற சூளுரைப்போம் என்று கோவையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை,

‘இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் அரசியல் எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டு தொடக்கத்தின்போது, புலவாமாவில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

என்னுடைய பெயர் ஸ்டாலின் என்பதால், கம்யூனிஸ்டு கட்சிக்கும் எனக்கும் எப்போது ஒரு உறவு உண்டு. என்னை பள்ளியில் சேர்க்கும்போது ஸ்டாலின் என்ற பெயரை மாற்றுமாறு பள்ளி நிர்வாகத்தினர் கூறினார்கள். பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் என்று தலைவர் கலைஞர் கூறிவிட்டார்.கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கைகளை முதலில் வெளியிட்டவர் பெரியார். திராவிட இயக்கம் வேறு, கம்யூனிஸ்டு கட்சிகள் வேறல்ல. கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆட்சி செய்யாமல், கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு ஆட்சி மேற்கொண்டார். 1971-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை நின்றது. அப்போது தி.மு.க.வை வீழ்த்த பல்வேறு சதித்திட்டங்கள் நடந்தன. அதை எல்லாம் மீறி தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தி.மு.க., ஆட்சியில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது தி.மு.க. ஆட்சி. ஒரு ஆட்சி எப்படி இருக்ககூடாது என்பதற்கு உதாரணம் மத்தியில் மோடி ஆட்சி. மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி.இந்தியாவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் ஆட்சி மத்தியில் தற்போது நடக்கிறது. ரபேல் போர் விமான ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. ரபேல் போர் விமானங்களை, 41 சதவீதம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு உள்ளன. அண்மையில் பெங்களூருவில் நடந்த கூட்டத்தில், இந்தியாவில் எந்த ஊழலும் இல்லை என, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேசினார். பா.ஜனதா ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. அதை அவர் மறந்து விட்டார்.

பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் புலவாமா தாக்குதல் தவிர வேறு எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்று கூறுகிறார். இது அவரது அறியாமையை காட்டுகிறது. 2014-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 2016-ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் பலியானார்கள். மற்றொரு தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். இப்போது 40 பேர் பலியாகி உள்ளனர். பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால், விவசாயிகள் தற்கொலை செய்வது, நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி திறப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்கும்.

பா.ஜ.க. ஆட்சி ஆபத்தான ஆட்சி. அதை வீழ்த்தவே ஒன்று சேர்ந்திருக்கிறோம். தமிழகத்தில் கஜானாவை கொள்ளையடிக்கும் கூட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க., ஆட்சி தற்போது இல்லை. அவர் தொடங்கிய அ.தி.மு.க.வை, ஜெயலலிதா கைப்பற்றினார். ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலா கைப்பற்றினார். தற்போது நடப்பது அண்ணா தி.மு.க. ஆட்சி அல்ல. அம்மா தி.மு.க. ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் கொலையும் செய்வார்கள். கோடநாட்டில் அது தான் நடந்துள்ளது. கோடநாடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களே இதுகுறித்து பேட்டி அளித்தனர். கொலைக்கு காரணமாக இருந்தவர் பழனிசாமி. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சிகளை அகற்ற சூளுரைப்போம். இந்தியாவை மீட்போம்; தமிழகத்தை காப்போம் என்பதற்கான உறுதியை எடுப்போம். தேர்தலில் வெற்றி பெறுவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசியதாவது:-

காஷ்மீர் புலவாமா பகுதியில் ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக பார்க்க வேண்டும். அரசு சார்பில், பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவம் சுயமாக செயல்பட முடியவில்லை.மத்திய அரசு காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால், மடியப்போவது இருநாட்டு மக்களும் தான். அதைத்தவிர்க்க வேண்டும்.இன்று தமிழகத்தில் உள்ள அரசு, மாநில உரிமைகளுக்காக போராட துணிச்சல் இல்லாத அரசு. மாநில மக்களுக்கு துரோகம் செய்வதுடன் மத்திய அரசின் உத்தரவுக்கு கட்டுப்படும் அரசாக உள்ளது. தமிழகத்தில் கவர்னர் அவரது எண்ணத்துக்கு செயல்பட்டு வருகிறார். அவரை தட்டிக்கேட்க ஆட்சியாளர்களுக்கு துணிவு இல்லை. நாம் அனைவரும் ஒன்றுபட்ட நிலையில் நின்று போராட வேண்டும். மத்தியில் ஒரு மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும். மாநிலத்தில் அதேபோல், வளங்களை காக்க கூடிய நல்லாட்சி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் பேசும்போது கூறியதாவது:-

மோடியும், அமித்ஷாவும் தமிழகம் ஊழல் கோட்டையாக மாறிவிட்டது என கூறினார்கள். 8 வழிச்சாலை திட்டமே கொள்ளை அடிக்கதான் என எடப்பாடி பழனிசாமியை, ராமதாஸ் கூறினார். ஆனால் இன்று அவர்கள் கூட்டணி அமைத்துள்ளார் கள். தேர்தல் தொடங்கும் முன்னே 15 தொகுதிகளை அ.தி.மு.க. இழந்துவிட்டது.

மோடியின் ஆட்சியில் 2 லட்சம் விசைத்தறிகள் மூடப்பட்டு உள்ளன. வங்கியின் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தவர்கள் வெளிநாடு சென்றுவிட்டனர். 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறக்கூடாது. நம் கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் பேசும்போது, இந்தியாவில் சமய சார்பற்ற பாதையை ஏற்படுத்த பா.ஜ.க. வை தூக்கி எறிய வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம் இருக்காது. மாநில சுயாட்சியை இழக்க நேரிடும், என்றார்.இந்த மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், நல்லகண்ணு, சி.மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்பட பல தலைவர்கள் பேசினார்கள்.

Next Story