பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து மாம்பழ மகசூலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்


பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து மாம்பழ மகசூலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Feb 2019 4:15 AM IST (Updated: 28 Feb 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா உற்பத்தியில் பயிர் பாதுகாப்பு மேலாண்மைகளை கடைபிடித்து மகசூலை அதிகப்படுத்திட விவசாயிகள் நடவடிக்கை எடுத்து தங்களின் வருமானத்தை மும்மடங்கு பெருக்க வேண்டும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி, 

தமிழ்நாட்டில் மாங்கனி மாவட்டம் என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான மா ரகங்கள் சுமார் 40,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு மாங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு மாம்பழங்களாகவும், மாம்பழக்கூழாகவும் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த தருணத்தில் தற்போது மாவில் பூக்களை அதிகமாக்குவதும், உற்பத்திதிறனை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும். தற்போது நிலவி வரும் சீதோஷ்ணத்தை கருத்தில் கொண்டு மாவில் பயிர் பாதுகாப்பு மேலாண்மைகளை கடைபிடித்து மகசூலை அதிகப்படுத்தி விவசாயிகள் தங்களின் வருமானத்தை மும்மடங்கு பெறுவது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளும்போது ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 7 மெ.டன். மாம்பழம் உற்பத்தியாகிறது.

மா-வில் பூக்களின் உற்பத்திதிறனை அதிகரிக்க பொட்டாசியம் நைட்ரேட் கரைசலை அதாவது 1 சதவீதம் என்ற வீதத்தில் தெளிக்க வேண்டும். மேலும் பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளித்த பின்பு ஒரு வாரம் கழித்து பின்னர் யூரியா 2 கிராம் முதல் 4 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து காலை நேரங்களில் தெளிக்கப்பட வேண்டும். இதுபோன்ற வளர்ச்சியினை ஊக்குவிக்கும் கரைசலின் மூலம் மா மரத்தில் பூக்கள் உற்பத்தி ஆகும் பூக்களின் அளவு அதிகரிக்கப்பட்டு மகசூல் கூடுதலாகும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் முதலாவது மா தத்துப்பூச்சியினை கட்டுப்படுத்த வேண்டும். மா தத்துப்பூச்சி மா - வில் பூக்கள் பூத்தவுடன் அதிக அளவில் தாக்குதல் தென்படும். பூக்களிலிருந்து காய் பிடிப்பதை தவிர்க்கும். இதனால் மா மகசூல் பெரிதளவில் பாதிக்கப்படும். மா தத்துப்பூச்சியினை கட்டுப்படுத்த இரண்டு முறை அசிபேட் ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது ஜோலோன் 1.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீரில் என்ற அளவில் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கப்பட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கப்பட வேண் டும். மா-வில் தத்துப்பூச்சி தாக்குதலை தொடர்ந்து சாம்பல் நோய், கரும்பூட்டை தென்படும். சாம்பல் நோயினை கட்டுப்படுத்த நனையும் கந்தகதூள் கரைசலை தெளிக்கப்பட வேண்டும். மேற்கண்டவாறு ஊக்குவிக்கும் கரைசல் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ளும்போது விவசாயிகள் தங்களது மா தோப்புகளில் அதிக அளவில் பூக்கள் உற்பத்திதிறனை அதிகரிப்பதுடன் மா மகசூலும் மூன்று மடங்கு அதிகம் பெறவாய்ப்புள்ளது.

இந்த தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Next Story