மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்
x
தினத்தந்தி 28 Feb 2019 5:00 AM IST (Updated: 28 Feb 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.

கமுதி,

கமுதி தாலுகா பேரையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 101 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாதந்தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களின் மூலம் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கி கூறப்படுகிறது. இத்தகைய முகாம்களில் முதியோர் உதவித்தொகை வேண்டி அதிக அளவிலான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து சிறுதானிய உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு மானியத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான நவீன வேளாண் எந்திரங்களை தாங்களே கொள்முதல் செய்து பயன் அடையலாம்.

தற்போது மத்திய அரசு, விவசாயிகளின் நலனுக்காக 5 ஏக்கர் வரையில் சாகுபடி நிலமுள்ள நேரடி பட்டாதாரர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கிடும் வகையில் திட்டத்தினை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக 75,534 தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டு முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது. விடுபட்டுள்ள தகுதியான பயனாளிகளை சேர்ப்பதற்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திருஞானம், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகிபிரமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story