‘அ.தி.மு.க. கூட்டணியை எதிர்க்க எந்த கட்சிக்கும் சக்தி இல்லை’ கடலூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு
“அ.தி.மு.க. கூட்டணியை எதிர்க்க எந்த கட்சிக்கும் சக்தி இல்லை” என்று கடலூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
கடலூர்,
கடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். நகர அவை தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன், நகர இணை செயலாளர் தேவிராஜா, மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.வி.மணி, வெங்கட்ராமன், நகர பொருளாளர் தனசேகர், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-
ஜெயலலிதா இரும்பு பெண்மணி, சிறந்த நிர்வாகியாக இருந்தார். அவரை பின்பற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது. பூமி உள்ளவரை ஜெயலலிதாவின் புகழ் நிலைத்து நிற்கும். ஜெயலலிதா விட்டு சென்ற திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செயல் படுத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரெயில் திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்ததாக கூறுவார்கள். ஆனால் 3 சதவீத பணிகள் மட்டுமே அவர்கள் செய்தார்கள். 97 சதவீத பணிகளை அ.தி.மு.க. அரசு தான் செய்தது.
இந்த திட்டங்கள் எல்லாம் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தான். புலவாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை தற்போது பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியை பார்த்து எதிர்க்கட்சியினருக்கு பொறாமை வந்துள்ளது. இந்த கூட்டணியை எதிர்க்க எந்த கட்சிக்கும் சக்தி இல்லை. பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
மு.க.ஸ்டாலின் கிராமந்தோறும் சுற்றி வருகிறார். டி.டி.வி. தினகரன் மாவட்டந்தோறும் சுற்றி வருகிறார். இதனால் எதுவும் நிகழாது. இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில் தான் தொண்டர்கள் இருப்பார்கள். குக்கர் சின்னத்துக்கு யாரும் செல்ல மாட்டார்கள். இரட்டை சிலை சின்னத்தை வெல்ல யாருக்கும் சக்தி கிடையாது.
ஏற்கனவே 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினோம். தற்போது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி இருக்கிறோம். ஆனால் தி.மு.க. இதேபோல் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதுண்டா? ஆனால் இது பற்றி மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். அவருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டேன். கமல்ஹாசனுக்கு தனிமனித ஒழுக்கம் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற இடைத்தேர்தலும் வர இருக்கிறது. ஆகவே அனைத்திலும் நாம் வெற்றி பெற வேண்டும். அ.தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணியை எதிரிகள் வீழ்த்த முடியாது.
இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜே.கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், அன்பு, சாந்தி, பிருந்தா சங்கர் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். முடிவில் நகர துணை செயலாளரும், நகர பேரவை செயலாளருமான வி.கந்தன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story