நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்துக்கு கூடுதலாக 500 ‘விவிபேட்’ எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்துக்கு கூடுதலாக 500 ‘விவிபேட்’ எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன
x
தினத்தந்தி 28 Feb 2019 5:00 AM IST (Updated: 28 Feb 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்துக்கு கூடுதலாக 500 ‘விவிபேட்’ எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

சேலம், 

நாடாளுமன்ற தேர்தலுக்காக சேலம் மாவட்டத்துக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவுப்படி சேலம் மாவட்டத்திற்கு கூடுதலாக 500 விவிபேட் எந்திரங்கள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் கருவி) ஒதுக்கப்பட்டு, பெங்களூரு பெல் நிறுவனத்திடமிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கொண்டு வரப்பட்டன.

இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கலெக்டர் ரோகிணி, சேலம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ‘விவிபேட்’ எந்திரங்களை சரி பார்த்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்தார். இது தொடர்பாக கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்கனவே சேலம் மாவட்டத்திற்கு வரப்பட்ட 8,154 வாக்குப்பதிவு எந்திரங்கள், 4,863 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 4,581 விவிபேட் எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிந்து பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது சேலம் மாவட்டத்திற்கு கூடுதலாக 500 விவிபேட் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்து பெங்களூரு பெல் நிறுவனத்திடமிருந்து வரப்பெற்றுள்ளது. அந்த 500 எந்திரங்களும் பெல் நிறுவனத்தின் பொறியாளர்களால் முதல்நிலை சரிபார்ப்பு செய்யப்பட உள்ளது. மேலும், சேலம் மாவட்டத்தின் அருகில் உள்ள ஈரோடு, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையத்தால் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களும் பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஈரோடு மாவட்டத்திற்கு 200 விவிபேட் எந்திரங்களும், நாமக்கல் மாவட்டத்திற்கு 150 விவிபேட் எந்திரங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 350 வாக்குப்பதிவு எந்திரங்களும், 300 கட்டுப்பாட்டு எந்திரங்களும் மற்றும் 700 விவிபேட் எந்திரங்களும், தர்மபுரி மாவட்டத்திற்கு 300 வாக்குப்பதிவு எந்திரங்களும், 300 கட்டுப்பாட்டு எந்திரங்களும் மற்றும் 800 விவிபேட் எந்திரங்களும் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான மாவட்ட தொடர்பு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ரோகிணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், தனி தாசில்தார் (தேர்தல்) திருமாவளவன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Next Story