மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் லாரி டிரைவர் தீக்குளிக்க முயற்சி
மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி, ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 36). லாரி டிரைவர். இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரோசனப்பட்டியை சேர்ந்த ஆண்டவர் மகள் வேல்மணிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
குடும்ப பிரச்சினை காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக வேல்மணி கோபித்து கொண்டு தேனியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். தன்னுடன் குடும்ப நடத்த வருமாறு முருகன், வேல்மணியை பலமுறை அழைத்தார். ஆனால் வேல்மணி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகன் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று மாலை ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தனது மனைவியை சேர்த்து வைக்கக்கோரி புகார் கொடுக்க முருகன் வந்தார். அப்போது அவர் திடீரென கையில் எடுத்து வந்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டே போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து தீக்குளிக்க முயன்றார்.இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடிவந்து பெட்ரோல் கேனை பிடுங்கினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியுடன் சேர்த்து வைக்கும்படி புகார் கொடுக்க வந்ததாக கூறினார். போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரை ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றி லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story