‘யூ-டியூப்’ பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த 2 பேர் கைது
டோம்பிவிலியில் யூ-டியூப்பை பார்த்து கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
தானே அருகே டோம்பிவிலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டு அச்சடிக்கப்படுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று குறிப்பிட்ட வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த வீட்டுக்குள், 2 பேர் கள்ளநோட்டுகளை அச்சிட்டு கொண்டிருந்ததை கவனித்த போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அங்கு அச்சடித்து வைக்கப்பட்டு இருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் புஷன் சாலுங்கே, சுகேஷ் பங்கேரா என்பதும், யூ-டியூப்பில் பணநோட்டுகள் அச்சடிக்கும் வீடியோவை பார்த்து அந்த கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்த போலீசார், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story