பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு, காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்


பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு, காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Feb 2019 4:38 AM IST (Updated: 28 Feb 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே பில்லமநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர்.

வடமதுரை,

வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் கதிர்நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, கடந்த 17-ந்தேதி தொடங்கியது. 10-ம் நாளான நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.

வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலில் அவிழ்த்து விடப்பட்ட கோவில் காளைகளை யாரும் பிடிக்கவில்லை. ஜல்லிக்கட்டில் பங்கேற்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த 585 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 430 காளைகள் தேர்வு செய்யப்பட்டு களத்தில் இறக்கப்பட்டன.

இதேபோல் காளைகளை அடக்குவதற்காக திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 355 பேர் பதிவு செய்திருந்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 338 பேர் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க காளையர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. சில காளைகள், காளையர்களுக்கு சவாலாக இருந்தது. ஜல்லிக்கட்டு களத்தில் திமிலை உயர்த்தியபடி நின்று வீரர்களை அச்சுறுத்தியது. இருப்பினும் சில காளைகளை, காளையர்கள் அடக்கினர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசுகள், பீரோ, கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் ஜல்லிக்கட்டை பார்க்க வந்த கரியாம்பட்டியை சேர்ந்த ஆச்சிகாளை (வயது 60), குமாரபாளையத்தை சேர்ந்த பாலச்சந்திரன்(28) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதேபோல் மாடுபிடி வீரர்களான திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த நாகேந்திரன் (22), நத்தம் விராலிபட்டியை சேர்ந்த அழகுராஜ்(24), மேட்டுப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (28), விஜயராஜா (26), மடூரை சேர்ந்த ராஜ்குமார் (28) உள்ளிட்ட 21 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் படுகாயம் அடைந்த 5 பேருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story