உலகுக்கே ஆபத்தான நாடு பாகிஸ்தான் மீதான தாக்குதலை தொடர வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்
ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தாக உள்ள பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா தொடர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை விமானங்கள் நேற்றுமுன்தினம் அதிகாலை அதிரடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து குண்டு மழை பொழிந்தது. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலக வரைபடத்தில் பாகிஸ்தான் துடைத்தெறியப்படும் வரை உலகம் முழுவதும் அமைதி என்பது இருக்காது. பாகிஸ்தான் போன்ற நாடு இந்தியாவுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஆபத்தானது.
பாகிஸ்தானில் ஜனநாயகம் சுத்தமாக இல்லை. அங்கு பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பெயரை கூறி ராணுவம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. உயிர்நீத்த நமது ராணுவ வீரர்களுக்காக ஒரேஒரு வான்வழி தாக்குதல் போதுமானதா?. அவர்கள் ரத்தம் அவ்வளவு மலிவானது கிடையாது.
அங்கு தொடரும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் வரை, நமது நாட்டு ராணுவ வீரர்களின் நடவடிக்கையும் தொடர வேண்டும்.
பாகிஸ்தான் மண்ணில் அல் கொய்தா தலைவரான ஒசாமா பின் லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றது. அதே பாணியில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் ஆசார் அழித்தொழிக்கப்பட வேண்டும்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1971-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் வலிமையை உலகத்துக்கு பறைசாற்றினார். பிரதமர் மோடி ஆட்சியில் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story