பனப்பாக்கத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை சமூக வலைத்தளங்களில் பரவியதால் நடவடிக்கை
பனப்பாக்கத்தில் கள்ளத்தனமாக நடைபெறும் மதுவிற்பனை சமூக வலைத்தளங்களில் பரவியது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பனப்பாக்கம்,
பனப்பாக்கத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து அதை கூடுதல் விலைக்கு விற்றுவந்தனர். இதற்காக கொட்டகை அமைத்து பார் போன்று செயல்பட்டு வந்தது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து மது குடித்துவந்தனர்.
இந்த நிலையில் கொட்டகைக்குள் முதியவர் ஒருவர் அமர்ந்து கூடுதல் விலைக்கு மதுவிற்பது போன்றும், சிலர் வந்து மதுவாங்கி குடிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதை பார்த்ததும் பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் வனிதா தலைமையில், கிராமநிர்வாக அலுவலர்கள் கோபிநாத், பூபாலன், சோமேன், குமரேசன், செந்தில்நாதன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று இரவு 7 மணியளவில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்ற இடத்துக்கு சென்றனர்.
அப்போது அங்கு மது விற்றுக்கொண்டிருந்தவர்கள் அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்கள் விட்டுச்சென்ற 10 மதுபாட்டில்களை மட்டும் அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் மது விற்பனைக்காக போடப்பட்டிருந்த கொட்டகையை பிரித்து தீ வைத்தனர். கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை நெமிலி இன்ஸ்பெக்டர் மகாலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.
தினமும் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யும் இடம் பார் போன்று செயல்பட்டுவந்தது சமூகவலைத்தளங்களில் வீடியோவாக பரவியது பனப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story