மாவட்ட செய்திகள்

ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தேனி மாவட்டம் முதலிடம் + "||" + The treatment of the mentally ill destitute Theni district topped

ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தேனி மாவட்டம் முதலிடம்

ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தேனி மாவட்டம் முதலிடம்
ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தேனி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
தேனி, 

தமிழகத்தில் ஆதரவற்ற மனநோயாளிகளை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தேனி, திருவண்ணாமலை, திருப்பூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆதரவற்ற மனநோயாளிகள் சிகிச்சை பிரிவு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் இந்த சிகிச்சை பிரிவு, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக தேனி மாவட்டத்தில் தான் இந்த சிகிச்சை பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது.

தற்போது தமிழகத்தில் அதிக மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தேனி மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது. இதுகுறித்து மாவட்ட மன நல மருத்துவர் ராஜேஷ் கூறியதாவது:-

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் இந்த சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள ஆதரவற்ற மனநோயாளிகளை மீட்டு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 73 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 25 பேருக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உறவினர்களை கண்டறிந்து அவர்களிடம் சேர்க்கப்பட்டு உள்ளனர். தற்போது வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் தொடங்கப்பட்ட 5 இடங்களை ஒப்பிடும்போது தேனி மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் தாய்-சேய் நலத்துக்காக இயக்கப்படும் 102 ஆம்புலன்ஸ் சேவையை ஆதரவற்றோர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவும் முதல் முறையாக தேனி மாவட்டத்தில் தான் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு தொடர்ந்து அழைத்து வரப்படுவார்கள்.

மருத்துவ சிகிச்சையோடு அவர்களுக்கு பூந்தொட்டி தயாரிப்பு, மருந்து அட்டை தயாரிப்பு போன்ற தொழிற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தற்போது 48 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 30 பேரின் உறவினர்களை கண்டறிய முடியவில்லை. மேலும், நோயாளிகள் வரும்போது போதிய இடவசதி தேவை. எனவே, கூடுதல் கட்டிட வசதி தேவை என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இங்கு சிகிச்சை மற்றும் பயிற்சி பெறும் நோயாளிகளை கொண்டு இயற்கை காய்கறி தோட்டம் அமைக்கப்பட உள்ளது.

பொதுஇடங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிபவர்கள் மட்டும் இன்றி, வீடுகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களையும் இங்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை