படிப்பு முடித்தவுடன் முயற்சி செய்தால் தான் வேலை கிடைக்கும் கலெக்டர் பேச்சு
படிப்பு முடித்தவுடன் முயற்சி செய்தால் தான் வேலை கிடைக்கும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி வகுப்பு நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்கள் 12 ஆண்டுகள் பள்ளி படிப்பையும், தற்போது கல்லூரி படிப்பையும் முடித்து உங்களது அடுத்த இலக்கு வேலைக்கு செல்வதாக இருக்கும். படிப்பு முடித்தவுடன் பலர் தங்களது திறமை, முயற்சியால் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் பலர் படித்து முடித்தவுடன் அரசு அல்லது தனியார் துறை வேலைக்கு செல்லலாமா? அல்லது சுய தொழில் தொடங்கலாமா? என அதற்கு பின்பு தான் சிந்திக்கிறார்கள். தங்களது பிள்ளைகள் படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும் என பெற்றோர்களுக்கு கனவு இருக்கும். சில குடும்பங்களில் பெற்றோர்கள் விவசாயம், கூலி வேலை செய்து தங்களது பிள்ளைகளை படிக்க வைத்து அந்த பிள்ளைகளும் நல்ல நிலைக்கு வளர்ந்து வருகிறார்கள்.
இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்பு எல்லா துறைகளிலும் உள்ளது. ஆனால் பலருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த இடைவேளையினை நிரப்புவதற்காக இதுபோன்று தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் பள்ளி படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி படித்திருப்பார்கள். இன்று பெரிய தொழில் அதிபர்களாக இருப்பவர்கள். ஆரம்ப காலத்தில் சிறு வியாபாரம் செய்து படிப்படியாக தொடர் முயற்சியால் முன்னேறி உள்ளார்கள். ஆனால் நம்மிடம் அவர்களது உழைப்பு, பொறுமை, முயற்சி இருப்பதில்லை.
படிப்பு முடித்தவுடன் முயற்சி செய்தால் தான் வேலை கிடைக்கும். அரசு துறைகளின் மூலம் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சின்னய்யா, உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சிவநேசன், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story