வெயில் அதிகரித்து வருவதால் காப்புக்காடு பகுதியில் குளம் அமைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


வெயில் அதிகரித்து வருவதால் காப்புக்காடு பகுதியில் குளம் அமைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Feb 2019 10:15 PM GMT (Updated: 28 Feb 2019 5:20 PM GMT)

வெயில் அதிகரித்து வருவதால் காப்புக்காடு பகுதியில் குடிநீர் குளம் அமைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணாபுரம், 

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான தச்சம்பட்டு, அள்ளிக்கொண்டபட்டு, தாங்கள், தலையாம்பள்ளம், வெறையூர், அண்டம்பள்ளம், பறையம்பட்டு, பழையனூர், பேரயாம்பட்டு உள்ளிட்ட பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான காப்புக்காடுகள், மலைகள் மற்றும் குன்றுகள் உள்ளன.

இந்த காப்புக்காடுகளில் மரம், செடி, கொடிகள் அடர்ந்து காணப்படுகின்றன. மேலும் இங்கு மான், முயல், காட்டுப்பன்றி, காட்டெருமைகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் உள்ளன.

இந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கியதை அடுத்து காப்புக்காடுகளில் இருக்கும் வன விலங்குகள் தண்ணீருக்காக கிராமப்புறங்களுக்கும், வயல்வெளி பகுதிகளுக்கும் அடிக்கடி வெளியே வருகின்றது.

மான்கள் அதிகளவில் தண்ணீரை தேடி வெளியே வருவதால் வாகனங்களில் சிக்கி அடிபட்டும், கிணற்றில் தவறி விழுந்தும், நாய்களால் கடிப்பட்டும் இறந்து விடுகின்றன. மேலும் சில சமூக விரோதிகள் விவசாய நிலங்களில் மின்வேலிகள் அமைப்பதால் வன விலங்குகள் அதில் சிக்கி உயிரிழக்கின்றன.

கடந்த ஆண்டை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் அவ்வப்போது வன விலங்குகள் காப்புக்காடுகளில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்கும் வகையில் வன விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக காப்புக்காடுகள், மலைகள், குன்றுகள் பகுதியில் ஆங்காங்கே குளம் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பினால் வன விலங்குகள் காப்புக்காடுகளில் இருந்து வெளியேறுவது ஓரளவிற்கு தடுக்கப்படும்.

எனவே வனத்துறை அதிகாரிகள் காப்புக்காடு பகுதியில் குளம் அமைத்து தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story