குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி பேச்சு
குற்றவாளிகள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் டி.ஐ.ஜி. ஜெயபாரதி பேசினார்.
வேலூர்,
வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் (ஆப்கா) தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 9 மாத அடிப்படை பயிற்சி முடித்த தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு ஆப்கா துணை இயக்குனர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். இதில் வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி கலந்துகொண்டு 16 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்கள் எப்போதும் தாய்வீட்டுக்கு செல்வதற்குதான் விருப்பப்படுவார்கள். அதே போன்று இதை நமது தாய்வீடாக கருத வேண்டும். சமுதாயத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் குற்றங்கள் நடக்கிறது. குற்றவாளிகள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள்.
குற்றங்கள் செய்துவிட்டு சிறைக்கு வருபவர்களை நல்லவர்களாக மாற்றும் பொறுப்பு சிறை அதிகாரிகளுக்கு உள்ளது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அவர்கள் வெளியே செல்லும் போது குடும்பத்தினர், உறவினர்கள், குழந்தைகள் மத்தியில் மரியாதை ஏற்படும் வகையில் செல்ல வேண்டும்.
சிறையில் நடக்கும் சம்பவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மற்ற துறைகளை போன்று இல்லாமல் நமது துறை சேவை நிறைந்தது. சிறைகளில் அதிக அளவில் பிரச்சினைகள் ஏற்படும். அதை சமாளிக்கும் மனவலிமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பேராசிரியை பியூலா வரவேற்றார். முடிவில் பேராசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story