பெரியகுளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
பெரியகுளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி ரூ.32 ஆயிரத்தை கைப்பற்றினர்.
பெரியகுளம்,
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் வட்ட வழங்கல் அலுவலராக பிரபாகரன் பணியாற்றி வருகிறார். இவர் பெரியகுளம் தாலுகாவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களிடம் இருந்து மாதந்தோறும் பணம் வாங்கி வருவதாகவும், மேலும் பல்வேறு வகையில் அலுவலகத்தில் பணம் லஞ்சமாக பெறுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுருளிவேல் மற்றும் போலீசார் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அலுவலக கதவுகளை அடைத்து சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தில் இருந்த வட்ட வழங்கல் அலுவலர் பிரபாகரன் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதில் அலுவலகத்தில் இருந்த ரூ.32 ஆயிரத்து 160 கைப்பற்றப்பட்டது. இந்த பணம் அலுவலகத்துக்கு எவ்வாறு வந்தது? யாருடையது? லஞ்சமாக பெறப்பட்ட பணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து போலீசார் அந்த பணத்தை கைப்பற்றினர். மேலும் இது சம்பந்தமாக தொடர் விசாரணை நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் தாலுகா அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story